
இலங்கை மீனவ மக்களுக்கு சீனா தற்காலிகமான வீடுகளை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த கண்டெய்னர் வீடுகள் நிரந்தரமானவை அல்ல; தற்காலிகமானவைதான். சுமார் 15 ஆண்டுகள் வரை தாங்கக்கூடிய அளவுக்கு வலிமையானவை.
இந்த வீட்டில் ஒரு குடும்பம் வசிக்கக்கூடிய அளவுக்குச் சமையலறை மற்றும் வரவேற்பறை ஆகியவை உள்ளே அடங்கி உள்ளன. துருப்பிடிக்காமல் இருப்பதற்காக வேண்டி தரமான ஃபைபர் மூலம் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த மாதிரியான வீடுகள்தான் அரபு நாடுகளில் வேலை செய்யப் போகும் இந்தியர்களுக்கு வழங்கப்படும். அதற்குள் நான்கு அல்லது 5 படுக்கைகள் போட்டுத் தங்கக்கூடியதாக இருக்கும்.
கடற்கரை ஓரமாக வாழும் மீனவ மக்கள் என்பதால் இந்த வீடுகள் புயல், மழைக்குக்கூடத் தாங்கக் கூடியதாக இருக்கும் என்கிறார்கள்.
இந்த வீட்டின் பாகங்கள் உதிரியாகச் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டு, இங்கே அப்படியே அதன் பாகங்களை இணைத்து உருவாக்கிவிடுகிறார்கள். அதற்கான உபகரணங்களைக் கூட இலவசமாகக் கொடுத்துள்ளனர்.
ஒரு புறம் மட்டுமே கதவு கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஜன்னல்கள் உள்ளன. மேலும் உள்ளே சாதாரண வீடுகளில் உள்ளதைப்போல மின் இணைப்புகள் அனைத்தையும் வைத்துள்ளனர்.
ஆனால், மீனவர்கள் இந்த வீட்டை வேண்டாம் என மறுத்தும் வருகின்றனர். அதற்குக் காரணம் இந்தத் தற்காலிக வீட்டைப் பெற்றுக் கொண்டால், நிரந்தர சிமெண்ட் வீட்டை இலங்கை அரசு கட்டிக் கொடுக்காமல் போகலாம் என்ற அச்சம்தான்.